Sunday, November 11, 2007

எழுத மறந்த டைரி..... 2 பாகம்





அன்று
ஒன்பதாம் வகுப்பில்
நாம் இருக்கும் இறுதி நாள்
இனி நான்கு நாட்கள் விடுமுறை
அது முடிந்தால் முழுப்பரிட்சை ...
வரும் போதேமூர்த்தியிடம்
சொல்லி இருந்தேன்
அவன் எனது நெருங்கிய தோழன்
உனக்கு தெரியும்
ஆனால்
அவனை பற்றி தெரியாத
ஒரு விசயம் ...
அவனுக்கு ரா,ரு,ரே என்ற
உச்சரிப்பு வராது
அவன் பெயரையே
அவன் திகுமூர்த்தி என்பான் ...
திருமூர்த்தி அப்படி
உருமாரும்
அவன் உச்சரிப்பில்....
ஆனால் மிகவும் நல்லவன் ..
அவன் வேண்டாம் என்று சொல்லியும்
முடிவெடுத்தேன்
உன்னிடம் பேச ...

காலையில்
இன்டர்‌வ்ல் மணி அடிக்க
நீயும் கருவாச்சியும் ( பூங்கொடி)
எப்பவும் நிற்கும் வேப்பமரத்தடிக்கு
அவனையும் இழுத்துக்கொண்டு
வந்ததை நினைத்து பார்க்கின்றேன்...

உன்னை நெருங்குகையில்
நெஞ்சம் கொஞ்சம் படபடத்தது...
மனதில் தைரியத்தை வரவழைத்து
உன்னிடம்சொல்லியே ஆகவேண்டும்
என்ற உறுதியில்
உனை நெருங்கினேன்
நெருங்க நெருங்க சிறிது வேர்த்தது ...
என்னை நானே சபித்துக்கொண்டேன்...
லெட்டர் ஆவது எழுதியிருக்கலாம்
அப்போது தோன்றவில்லை ...

நான் சொல்லவேண்டும் என
நினைத்ததை முக்கியமாக
சொல்ல மறந்து ..பேசவேண்டும் என்பதுபோல்
ஏன் என்னிடம் பேசுவதில்லை ?...என்றேன்..
நீயோ.... அப்புறம் இப்புறம் பார்த்துவிட்டு
ஒன்றுமில்லை என்று
உள்ளுக்குள் சிரித்ததை
உணர்ந்துகொண்டேன்...

அதற்குள் பள்ளிமணி அடிக்க
இனி நின்றால் தண்டபாணி வாத்தியாரின்
தடி அடி கிடைக்கும் ...
ஓடிவிட்டேன் உனை விட்டு.....

வகுப்பில்
நான் மூர்த்தியை
தொண தொனத்துக்கொண்டு
இருந்ததை நினைத்தால்
இப்பவும் சிரிப்பு தான் வருகிறது ...
பள்ளி விட்டு செல்கையில்
நீ என்னுடன் வர வேண்டும் ..
இதற்கு யோசனை கேட்டால்
சொல்ல தெரியாமல் முழிக்கிறான்...
நீண்ட இடைவேளைக்கு பிறகு
இருவரும் சேர்ந்து நல்ல முடிவெடுத்தோம்,...

தினமும்
மதியம் பள்ளி எதிரில்
மணியாச்சி கடையில்
டீ வாங்கி வரச்சொல்லி
தமிழ் ஐயா என்னை அனுப்புவது
உனக்கு தெரியும் அல்லவா ...
இன்றும் அனுப்பினால் வசதி...
சாமியை வேண்டி காத்திருந்தேன்
வாத்தியார் வருக்கைக்கு ....

இரண்டாவது பெல் அடிக்க
தமிழ்வாத்தியார் தொடங்கினார்
தமிழ் பாடத்தை... கோடானுக்கோடி கொடுத்தேனும் ....
தொடங்கி உண்ணாமை கோடியுரும்...
கடைசிகோடிக்கு வந்துவிட்டார்...
இனியும் டீ வாங்க மட்டும் சொல்லவில்லை...
வரிசையாக மயில்சாமி ..
அர்ச்சுனன் ,மூர்த்தி, ராசு, என
ஒவ்வொரு கோடியாக கேட்டு ..இறுதியில்
ரெட்டமண்டை பாண்டியில் வந்து நிறுத்தினார்...

இதற்கிடையில்
அவரது கை பாக்கெட்டில்
தேடுவதை பார்த்த போது
மனம் மகிழ்ச்சியானது....
பிரார்த்தனை வீண் போகவில்லை ...
இப்போது பெல்அடித்து விடுவார்கள்
உடனே காரியத்தை முடிக்கவேண்டும்...
சில்லரையை வாங்கிக்கொண்டு ஓடினேன்
உன் சைக்கிளை தேடி வேப்பமரத்தடிக்கு...

உனது சைக்கிளை வேகம்
அடையாளம் காண முடிந்தது
புதியது அல்லவா... அடுத்து சென்று
பின் சக்கரத்தின் காற்றை விடுதலை செய்தேன்....
வேலை முடிந்து திரும்புகையில்...
ஓவிய மாஸ்டர் மாணிக்கம்....
உடனே தமிழ் ஐயா தந்த
சில்லரையை சிதற விட்டு
தேடுவது போல் பாசாங்கு
செய்து நழுவி விட்டேன்...
வேலை முடிந்தது..ஆனால் மனம்..
அலைப்பாய தொடங்கியது...

நீ... சைக்கிளை உருட்டிக்கொண்டு
என்னுடன் வர வேண்டும் ....
நான் என்னவெல்லாம்
உன்னிடம் பேச வேண்டும் ...
நிறைய சினிமா காட்சிகள்
மனதில் வந்தது... அன்பே வா,...16 வயதினிலே ...
நேற்று பார்த்த கிழக்கே போகும் ரயில் என
பலவும் மின்னி மறைந்தன உள்ளத்தில் ...
எதுவும் சரியாக தோன்றவில்லை ...
நேரமும் நெருங்கி விட்டது

4.15க்கு இறுதி மணி...
நீ போய் சைக்கிளை
எடுக்கட்டும் என காத்திருந்தேன்...
மூர்த்தியிடம் இன்று மயில்சாமி பின்னால்
போக சொல்லிவிட்டு உன்னுடன்
நான் நினைத்தபடி சைக்கிளை
உருட்டிக்கொண்டு நடக்க
முடிவு செய்தேன்.....

நீ சைக்கிளை எடுத்து முன்னால் நடக்க
நான் மெதுவாக பின்னால் தொடர்ந்தேன்...
நமது ஊருக்கு இரண்டு மைல்தூரம்
செல்லவேண்டும் என நினைத்த போது
மனம் துள்ளி குதித்தது....
அத்தனை தூரம்... அத்தனை நேரம்...
உன்னுடன் ,
உன்னை பார்த்துக்கொண்டும்
பேசிக்கொண்டும் இருக்கலாம் என்றபோது
ஆனந்தம் நெஞ்சில்
அலை பாய தொடங்கியது....

உன் அருகில் நெருங்கி என்ன? என்றேன் ....
நீயோ... சைக்கிளில் காற்று இல்லை என்றாய்..
சரி காற்றாக நான் இருக்கிறேனே
உனை தூக்கி செல்ல...
மனதில் நினைத்துக்கொண்டு...
நானும் மெதுவாக உன்னுடன்
நடக்க தொடங்கினேன்...

அன்று நடந்த நமது
உரையாடல்களை இன்றும்
உருப்போட்டு பார்ப்பதில்
எத்தனை மகிழ்ச்சி தெரியுமா?...
அன்று எனக்கு உன்னுடன் நடக்க
உதவியது உனது மாமா தானே..
எதிரில் வந்த அவர் என்னிடம் பத்திரமாக
வீடு வரை கொண்டுபோய்
விடவேண்டும் என்று சொன்னது
எத்தனை வசதியாகி விட்டது..
நினைத்து பார்க்கிறேன்....

என்னை பிடிக்கவில்லையா ?....என்றேன் நானும்...
நீயோ....பிடித்து விட்டாயே உடும்பாக என்றாய்....
நீ அழகாய் இருக்கிறாய் என்றேன்....
நீயோ....உன்னோடு நிற்கையில் தானே என்றாய்...

உன் சிரிப்பு எனை மயக்குதே என்றேன் ...
நீயோ....உனக்காகவே சிரிக்கிறேன் என்றாய்....
உன் பார்வை மின்னலாய் தாக்குதே என்றேன்...
நீயோஇமையாக மாறி அணைத்திடவா உனை என்றாய்..

உன் இதழ்கள் எனை இழுக்கிறதே என்றேன் ...
நீயோ....உனக்காகவே அது இதழ் விரிகிறது என்றாய்...
உன் பேச்சு எனை மயக்குது என்றேன் ...
நீயோ....உன் மார்பில் மயங்கவே பேசுகிறேன் என்றாய்...

உன்னை கட்டி பிடிக்க ஆசை என்றேன்...
நீயோ....உன் கண்கள் எனை காயப்படுத்துகிறதே என்றாய்...
உன் நடை அழகான நடனம் என்றேன்...
நீயோ....அரங்கேறும் நாள் பார்க்க ஆசை என்றாய்...

இதயத்தில் எனக்கு இடம் தருவாயா என்றேன்...
நீயோ....உள்ளே...
கோட்டை கட்டி குடும்பம் நடத்த தெரிகிறது....
வெளியில் மட்டும் என்ன பாசாங்கு ?.. என்றாயே !!!!

என்ன பார்க்கிறாய் ? .....
இது எதுவும் நாம்
இருவரும் பேசவில்லையே
எனத்தானே....
அடி பெண்ணே.. !!!...
உனக்கு தெரியாது....
அன்று நீ பார்த்த பார்வையும் !!!...
பிடித்திருக்கிறது என்று சொன்ன
ஒரு வார்த்தையும் தான்..!!!!...
இன்று என் மனதை
இப்படி எல்லாம்
அசை போட வைத்தது....
என் அன்பே.!!!
      - விஷ்ணு 

2 comments:

Anonymous said...

மிகவும் அருமையாக இருக்கிறது ...உங்கள் பழைய டைரி ...வாழ்த்துக்கள்

Unknown said...

மிகவும் இரசித்து படித்தேன் உங்கள் டைரியை..........மற்றவங்க டைரி படிக்கறது சுவாரஸ்யம்தானே? ஆடோகிராப் படம் பார்த்த நினைவு வருகிறது....