Monday, November 24, 2008

பிரிவும் ஒரு காதல் தான் !!!...






பிரிவும்  ஒரு  காதல் தான் !!!...
உனக்காக
என் ஆசைகளை
பிரிந்தபோது ...

பிரிவும் ஒரு  காதல் தான் !!!...
உனக்காக
என் விழிகள்
உறக்கத்தை பிரிந்தபோது ...

பிரிவும் ஒரு  காதல் தான் !!!...
உனக்காக
என் உறவுகளை
நான் பிரிந்த போது ...

பிரிவும் ஒரு  காதல் தான் !!!...
எனக்கான
என் வாழ்வை
நான் மறந்த போது ...

பிரிவுகளின் அர்த்தத்தை
உணரவைத்து பிரிந்தவளே ..
காதலிக்க தொடங்கிவிட்டேன் ..
காதலாக உன் பிரிவை கூட !!!...

Saturday, November 22, 2008

கனவுப்பறவை...






இதயத்துள்
புள்ளிகளில் தொடங்கி
வட்டமிட்டு வட்டமிட்டு
நாடி நரம்புகளை
அடக்க துடித்திருந்த
கனவுகளை ....

சிலுவையில் அறைந்து
சிறை படுத்திய திருப்தியில்
சிறகுகளை
முறித்துக்கொண்டு
திரும்ப நடக்கிறேன் ...

கடந்து வந்த சுவடுகளே
கை பிடித்திழுக்க
முளைக்க தொடங்கின ...
மீண்டும் சிறகுகள் ....

Friday, November 21, 2008

கடந்த வாலிபம் ...

அதி பிரமாண்டமாய்
சிறகடித்து
வான்தொட்டும் ...
திரும்பும்வழி தெரியாமல்
விலகி போன
வெள்ளாடாய் மனம் ...

பிரதிபலித்த
பிம்பங்கள்
அழுத்தி அழுத்தியே
உடைந்து விட்ட
நிலைக்கண்ணாடி ...

வழி நெடுக
கசிந்து கொண்டு இருக்கிறது ...
கீறிய ரணங்களின்
வேர்வைகள் ...
தொடர்ந்து
துடைத்திருந்தும்
வழிந்த வண்ணமாய்
கடந்திருக்கிறது
வாலிபம் ....

Saturday, October 11, 2008

கனவொன்று நேற்றும் ...



அர்த்த
ஜாமத்தில்
அடிக்கடி வரும்
கனவொன்று
நேற்றும் ...

இருண்ட அறை ..
என்னால்
இயன்றது
இத்தனையே என
இருட்டை
விரட்டிக்கொண்டு
ஓரத்தில் சிறு விளக்கு ...

அவ்வப்போது
தேங்கல்களாய்
சில முனங்கல்கள் ..
மெல்ல பதட்டத்தோடு
நெருங்குகிறேன் ..

மூலையில்
முகம் புதைத்து
நெஞ்சில் உள்ளதை
சொல்லத்தெரியாமல்
அழும் சிறு குழந்தை ..

ஆறுதலாய்
அரவணைக்க
அன்பாய் தொட்டு
மூடி இருந்த
பிஞ்சு கைகளை ..
விலக்குகிறேன் ..

ஐயோ !!!...
என் முகம் ..

சிறு வயதில்
அறியாமல்
அனாதையாய்
நான் தொலைத்த
அன்றைய என்முகம் ...

Tuesday, September 23, 2008

நிழலும் நிஜமாகும்...


நீண்ட
நேரமாய்
மௌனம் எனை
விழுங்கிக்கொண்டு ..

அறையின்
வலது மூலை
திறந்த ஜன்னலில்
என் தேடல்களின்
தொடக்கமாய்
பகல் உதிர்கிறது
பழுத்த இலையாக ...

உன் விழிகள்
என் கனவுகளுக்கு
மருதாணி வைத்து
அழகு பார்த்த நாட்கள் ..

உன்
இளம்பிறை
விழிக்கதிரில்
உறக்கத்தை மறந்து
ஒளி வீசிய
என் இரவுகள் ...

ஒரே வினாடியில்
நிசப்தமான
நெஞ்சின் தாளமும்
ஓலமிட்டு அழ வைத்த
உன் பிரிவும் ..

நரகக்கோட்டையின்
மதில்கள் முட்டி
சிதைபட்ட ஆத்மாவுமாய் ..
இரவுகளை தேடுகிறேன்
எனை அழைக்க
நீ வருவாய் என ...

நேரமாகிறது
இந்த பகலுக்கு ...
கதிரவனே
கண் மறைந்திடு ...
நிழலும் நிஜமாகும்
நேரமிது ..

Thursday, September 11, 2008

தொடர்ந்து வரும் முதல் சந்திப்பு ...




நான்
அன்றும்
வழக்கம்போல்
பேருந்து நிறுத்தத்தில் ...

பட படக்கும்
விழிகளோடு
சிறகடித்து வருகிறாய் ..

நெருங்கி வர வர
எனை நோக்கி ...
மெல்லிய புன்னகை !!!...

அந்த புன்னகையில்
சிறிதாக சுருங்கிய
இந்த பிரபஞ்சம் ...

இன்றும் சிறிதாகவே ...
விமோசனமே இன்றி
விரியாமல் ...

மீண்டும் மீண்டும்
சொன்னதையே
சொல்லிக்கொண்டிருந்தால்
எதையும்
எதுவுமாக்கலாம் ...

தொடர்ந்த
நம் சந்திப்புகளில் ..
சொல்லி சொல்லி
என்னில் நீ
எதை ..எதுவாக்கினாய் ???..
இன்றும் எனக்கு
புரியாத புதிராய் ...

காலங்கள்
பல கடந்தும் ...
மனதில் தினம் சந்திக்கிறேன் ..
அதே காலை...
அதே நிறுத்தம் ...

அனைத்தும்
அப்படியே ..
ஆனால் நீ மட்டும்
முந்தைய
நாட்களை விட
அதி அழகாய் ...அன்பாய் ..
சொன்னதையே
சொல்லிக்கொண்டு ...

Wednesday, July 16, 2008

தூசிகளாய் ...

























நீ காதலை
உணர்ச்சிகரமாக சொல்லிய
அந்த இரவில்...
உனக்காக
நான் வடித்த கவிதை ..
உனது இதய அறையில்
எங்கோ ஒரு மூலையில்
தூசிபோல...

இனியும்
சில வருடங்கள்
அது தங்கி இருக்கலாம்
யாருமே அறியாமல் ..

பனிக்காலம்
மழைக்காலம் என்பது போல்
மறதிக்காலம்
உன் மனதை
மூடும் வரை ..

அதன் பின் ..
வேறொரு இரவு ..
வேறொரு கவிதை என
தூசி மீது தூசி படர்வது போல் ,..

இப்படித்தான்
இவ்வுலகில்
மீண்டும் மீண்டும்
காதல்களும்
கவிதைகளும்
தூசிகளாய் ....

Monday, June 9, 2008

இந்த ஜென்மம் ...


பதில்கள்
பல இருந்தும் ..
மொழிகளின்றி
ஊனமாகிவிட்ட
கேள்விகள் ...

மீட்ட துடித்த
விரல்களையே
காயமாக்கிவிட்டு
கண்ணீர்விடும்
வீணை நரம்புகள் ..

இதயத்தில் தங்கி
வெளிவரா
ஆசைகளின் ..
அன்றாட அவலங்கள் ...

தோல்வி என
தெரியாமல்
தொடர்ந்து
தீக்கிரையாகும் ..
விட்டில் பூச்சியின்
விளக்கு காதலாய் ...

இந்த ஜென்மமும் ..
நகர்கின்ற
பரிதாப நாட்களும் ...

Monday, March 3, 2008

சமர்ப்பணம் ...




உன் நிழல்களில்
நிஜத்தை தேடிய
என் நினைவுகள்
சிதையிலே தீ கனலாய் ...

ஓசைகள்
ஒடுங்கிவிட்ட
கள்ளிமுள் காட்டின்
காரிருள்
மௌனங்கள்
கண்களுக்கு
காட்சிகளாய் ....

கண்ணீர் ஆற்றின்
கரையோரம்
கருநாகம் ஊர்கின்ற
மண் கோபுரத்தின்
விஷ வாடையும்
பலி மந்திரமும்
பகல் கனவுகளாய் ....

உயிர் பெறும்
ஒவ்வொரு கணங்களும்
நீ எனக்கு
சமர்ப்பணமாய்
சார்த்திய
வாடா மலர்களே .....

Friday, February 15, 2008

இருண்ட நாட்கள் ...




நீ
எடுத்து வைத்த
அடிகள் எல்லாம்
என் இதயத்தில்
என்பதாலோ ....
விதிக்கும் சதிக்கும்
எனக்கு
வித்தியாசம்
தெரியாமல் போனது !!!...

நான் உருகுவது
தெரியாதது போல்
நீ
உன் பார்வையை
மாற்றிக்கொண்டதும் !!!...
என்
கண்களை காண
தயங்கி நிற்கையில்
உன் விழிகளில்
கண்ணீர் உறைந்ததும் !!!...
விதியாகிப்போனதுவோ !!!...

இன்று
என் இதயத்தில்
முகம் காண
துடிக்கிறாய் ...
முடியாது பெண்ணே ...
நேற்றைய தெளிந்த
நீரோடை அல்ல அது !!!...

உன்
கபடக்காதலை
அதில் நீயும்
கலக்கியதால் ...
காணாமல் போய்விட்டாய்
கண்ணே ...
என் மனமும்
கலங்கியதால் !!!....

சதியாக நீயும்
என்னில்
சதுரங்கம் ஆடி விட்டாய் !!!...
விதியாக நானும்
வீழ்ந்து விட்டேன்
வீதியிலே !!!...

என்
இதயத்தில் சாய்ந்து
இருட்டாக்கி சென்றவளே !!!...
அணைந்து விட்டாலும்
தழும்பாய்
இன்றும் நீ
தங்கி நிற்கிறாய்
என்னுள்ளே ..

Wednesday, January 16, 2008

பைத்தியமாய் ...





என் கனவு....

என் இரவுகளை
நீ சிறை பிடித்ததால்
என் கனவுகள்
களவாடப்பட்டு விட்டன !!!...
விடுதலைக்கு
இன்றும் என்விழிகள்
சாட்சி கூண்டில் ...

என் ஆசைகள் ...

அழகாய் இருக்கிறதடி
உன் வாசல் கோலங்கள்...
புள்ளிகளாய் நீயும்
என் ஆசைகளை
வைப்பதாலோ !!!...
நசுங்கித்தான் போனதடி
அதுவும்
உன் வீட்டு நாய்குட்டி
முதல் பால்காரன் வரை
பாதங்கள் பட்டு !!!..

என் நினைவுகள் ....

மறந்துவிடு
எனச்சொல்லி
நீ எறிந்த கல்லில்
உடைந்து விட்டது ...
கண்ணாடியாய் !!!...
ஓராயிரம்
உன் பிம்பங்கள்
உடைந்த துண்டுகளில்
உட்கார்ந்து கொண்டு
இன்றும்
கீறுகின்றன...
என் இதயத்தை !!!...

என் சிரிப்பு ...

அதை எடுத்து நீயும்
வீதியில் எறிந்ததால்
எனை பார்த்தாலே
அள்ளி தருகிறார்கள்
அனைவரும் எனக்கு...
என்ன செய்ய ...
நானும் தெரிகிறேனே
பைத்தியமாய் !!!...
அவர்களுக்கும் ...

Monday, January 14, 2008

இனிய நட்பு ,...





என் இனிய தோழியே ...
நினைவிருக்கிறதா உனக்கு...
நமது அறிமுக நாட்கள் ...
ஆனந்தமாய் ..ஆர்பாடமாய்...

நானும் ஆமை வேகத்தில்
நீயோ அதிவேக புகைவண்டியாய்..
நல்ல நண்பர்களாய் நாமும்
நெகிழாத நாளும் உண்டோ

தொலைவில் இருக்கும் உனை
தொடர்ந்து வந்திடவே
தொலைபேசி உதவி அது
தொடர்கதையாய் தொடர்கிறதே

இன்பங்களை மட்டுமே
என்னவள்க்கு சொந்தமாக்கி
துன்பமது வரும்போது நெஞ்சம்
துணையாக உனை தேடும்

கனமான கவலைகளில் நானும்
கால் இடறி வீழ்வதில்லை
தோள் கொடுக்க நீயும் வந்து
தோழியாக நிற்பதனால் ...

இறந்த கால ஏமாற்றங்கள்
எத்தனையோ எந்தன் உள்ளில் ...
துவண்டு போன மனதோடே
இருளாக இருந்த எனை ..

விளக்குடனே நீயும் வந்து
வெளிச்சமாக பாதை தந்தாய்..
தோழி நீயும் கிடைததிலே ..
தலைகனமே எனக்கும் கொஞ்சம் ...

இதயத்தின் தோட்டத்தில்
நட்புதனை பயிர் செய்வோம் ...
காவல் காப்போம் காத்திருந்து
காலமெலாம் அது பூக்கட்டுமே ...