Sunday, November 11, 2007

எழுத மறந்த டைரி,....


எனது
இனிய தோழர்களே !!
இது கவிதை அல்ல ஒரு சிறு கதையாக
நினைத்து படிக்கவும்.....
அன்புடன்
விஷ்ணு.....


என் நினைவுகள்
பின்னில் நடக்க
நினைத்து பார்க்கின்றேன்,...
வாசலின் ஓரம்..
தணல் தந்த மாமரம்...
உதிர்ந்து கிடந்த மாம்பூக்கள்...
இரை என பூக்களை
சிறை பிடித்த கோழிகள் ...
சிலிர்த்துக்கொண்டு துப்பியதும்...
சிறு தூறல் மழையில்
தாகம் தீர்க்க வந்த காகங்கள்
கோழியின் கொஞ்சல் கண்டு
ஓடியதும் என் மனதில்
இன்றும் மறையாமல் இருக்கிறது....

அன்று நீ...
மஞ்சள் பாவாடையும்
கருப்பு சட்டையுமாய்...
ஒய்யாரமாக நடந்து வர...
இடப்புற கோழிக்கூண்டல்லவா
எனக்கு அடைக்கலம் தந்தது
உனை கடை கண்ணால் பார்க்க....
அன்று எனை கண்டு
அத்தே !!!!! ... என்று அலறியதையும்
நானும் மறக்கவில்லை....
கோவில் குளத்தில்
குளித்தெழுந்த எனது
அரைகுறை ஆடையும்...

நீ...
சைக்கிள் ஓட்டி
படிக்கவேண்டும் என்றாய்...
நானும்
மெயின் ரோட்டில்
பழனி அண்ணன் கடையில்
காவலாய் காத்திருந்து
உருட்டிக்கொண்டு வந்தேனே
சைக்கிளை உனக்கு சொல்லித்தர ...
அன்று மாலைவரை
சைக்கிளை நீ மிதிக்க
விழாமல் இருக்கவே
இருக்கைக்கு பதில்...
உன் இடுப்பை
எத்தனை முறை பிடித்தேன்
என்பது எனக்கு மட்டுமே
தெரிந்த விசயம்...அதை
இன்றும் என் நெஞ்சிலே
இன்ப நினைவாய் கொண்டு நடக்கிறேன்...

அடுத்த
ஐந்தாரு நாட்கள்
உனை ஆளையே காணவில்லை...
பார்க்க வரலாம் என்றால்..
அந்த பக்கமே போகாதே !!!..
அம்மாவின் ஆணை...
அன்று சைக்கிள் ஓட்டுக்கையில்
இரண்டு முறை கீழே விழுந்தாய்
ஏதாவது அடிபட்டதோ?
என்னிடம் சொல்லாமல்
மறைத்து விட்டாயோ?
தெரியவில்லை...
என் மனமோ
அந்த வாரம்
முழுவதும் சஞ்சலத்தில்....

அடுத்த நாள்
அம்மாவும் பக்கத்துவீட்டு
கனகக்காவும்
மாடு கழுவ வரும்
பேச்சிமுத்துவும்
குசுகுசுக்கும் ஓசை ...
உன்னை பற்றியோ
சந்தேகம் வர
காது கொடுத்தேன் ...
ஒன்றும் புரியவில்லை.....
சாப்பாடும் இறங்கவில்லை
சாப்பிடவும் பிடிக்கவில்லை ...
யோசித்து பார்த்தேன்....
மீண்டும் சந்தேகம்....

பழனியாத்தா பேத்தி
குருவம்மாவுக்கு
பேய் பிடிச்சதா சொன்னாங்க
அது ஏதாவது...
ஒண்ணுமே புரியல ...
பிள்ளையார் கோயிலுக்கு
நாளைக்கு போகணும்....
நினைத்துக்கொண்டு
படுத்துவிட்டேன்...

காலையில்
பிள்ளையாரைதொழுது
அம்மாவிடம்
கணக்குநோட் வாங்க
ராசு வீட்டுக்கு போகிறேன்
பொய் சொல்லி
நடையை கட்டிவிட்டேன்
உன் தெருவுக்கு...

ராசுவை கண்டு
"ஏன்டா செல்விக்கு என்னாச்சு ?"
என்ற போது
"எனக்கு தெரியாது என்றான்"...
அவுக வீட்டிலே நெறய
உறமுற வந்திருக்காக .....
எட்டிபாரடா என்று எப்படி சொல்லியும்
முடியாது என
முடிவாக சொல்லிவிட்டான் ...

மரப்பேட்டை
சேட்டு கடையில்
வாங்கிய பம்பரம்
பாக்கெட்டில் இருந்தது (30 காசு)
தானமாக அதை கொடுத்து
உன்னை பார்த்து வர சொன்னதை
நினைத்து பார்க்கிறேன்...

கரிசனம் என் மீதோ.....
இல்லை... உன் மீதோ தெரியவில்லை
ஓடி வந்து சொன்னான்
"டேய் செல்வியை உக்காற வச்சிட்டாங்கலாம் ".....
யாரோ இருவர்
பேசி கொண்டதில்
கிடைத்ததை எனக்கு கொட்டினான்...
புரியவில்லை இருந்தும்
யோசித்து பார்த்தேன்...
மெதுவாக நடக்க ஆரம்பித்தேன்....
யாரிடம் கேட்பது என
தெரியவும் இல்லை....
அன்றும் தூங்கவில்லை....

ஒரு வாரம் முடிந்திருக்கும்
நீயும் கருவாச்சி
பூங்கொடியும்
கோவிலுக்கு போவதாக...
சொன்னது...
ரெட்டத்தலை பாண்டி...
ஓடோடி வந்தேனே உனை பார்க்க...
ஞாபகம் இருக்கிறதா உனக்கு ?
புதிதாய் தெரிந்தாய் !!!...
உன் உடையில் மாற்றம் !!!...
உன் நடையில் மாற்றம் !!!...
உன் பார்வையில் மாற்றம் !!!...
எல்லாம் மாறி விட்டது
அடிக்கடி என் வீட்டிற்க்கு வரும் நீ ....
அத்திப்பூத்தாற் போலேவர தொடங்கினாய் ...
என் முகத்தை நேரில் பார்க்க மறுத்தாய் ...

"நீ மறைந்திருந்து பார்ப்பது போல்
நானும் உணர தொடங்கினேன் "...!!!...

2 comments:

meethalajesh said...

hey this is really good.

meethalajesh said...

hey this is really good.